இராமநாதபுரம் அருகே….
இடந்த 40 ஆண்டுகளாக பாதை இன்றி தவித்து வந்த பொதுமக்களுக்கு பாதையை ஏற்படுத்திக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் – பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி…
ராமநாதபுரம், ஜுலை 31-
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சின்னாண்டி வலசை ஊராட்சியில் கடந்த 40 ஆண்டு காலமாக ஒரு கிராமத்திற்கு பாதையே இல்லாமல் தவித்து வந்துள்ளனர். பாதைக்காக ஒரு குடும்பத்தையே நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற வை. சஞ்சய் காந்தி தனியார் நில உரிமையாளர்களிடம் பேசி பாதைக்கு தேவையான நிலத்தை விலைக்கு வாங்கி பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் அதற்காக அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சின்னாண்டி வலசை ஊராட்சியில் சின்னாண்டி வலசை, சங்கன்வலசை, புதுக்கோயில், மகுளிவலசை , வில்லிவலசை, பருவிநிலம், குமரபுரம்,செட்டி தோட்டம் , தோரையன்வலசை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவராக சஞ்சய் காந்தி தற்போது வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவர் பணிகளை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சின்னாண்டி வலசை ஊராட்சிக்கு உட்பட்ட தோரையன்வலசை என்ற கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் கோவில் திருவிழா நடத்துவதற்கும் அந்த ஊரின் முக்கிய பிரதான சாலையை அடைவதற்கும் தனியார் நிலத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த நிலத்தின் உரிமையாளர்கள் அந்த கிராம மக்களையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில் எந்த தேர்தல் வந்தாலும் சுமார் 40 ஆண்டு காலம் அந்த குடும்பத்தினர் சொல்பவர்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும். தேர்தல் வெற்றி பெற்ற பின்னரும் அந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தர மாட்டார்கள். பாதை அமைத்துக் கொடுத்து விட்டால் இவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள் என கருதிய அந்த குடும்பத்தினர் இவர்களுக்கு பாதையை அமைத்துத் தர முன்வரவில்லை என கூறப்படுகிறது . இந்த சூழ்நிலையில் செய்வதறியாது திகைத்த அந்த பகுதி மக்கள் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அந்த குடும்பத்தினரை எதிர்த்து போட்டியிட்ட வை. சஞ்சய் காந்தி என்பவருக்கு வாக்களித்து அவரை அமோக வெற்றி பெறச் செய்தனர். இதனை அறிந்த அந்த குடும்பத்தினர் தங்களது நிலத்தில் வேலி போட்டு கிராம மக்கள் வெளியேற முடியாத அளவிற்கு தடை செய்தனர்.
உடனடியாககளத்தில் இறங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய்காந்தி 40 ஆண்டு காலம் பாதையின்றி தவித்து வந்த பொது மக்களுக்கு உதவும் வகையில் அந்த பகுதி தனியார் நில உரிமையாளர்களிடம் பேசி அவர்களின் நிலங்களை கிரையம் பெற்று கீழக்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் அரசின் பெயரில் பதிவு செய்தார்.
தொடர்ந்து உடனடியாக அந்தப் பகுதியில் மணல் அடித்து பாதை அமைத்து அதை ஒரு சாலையாக மாற்றினார். இந்த நிலையில் அந்தப் பகுதி மக்கள் ஒரு குடும்ப ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு கிடந்தவர்கள் தற்போது சுதந்திரம் கிடைத்து விட்ட உணர்வுடன் துள்ளிக் குதித்ததை நம்மால் பார்க்க முடிந்தது. ஆம் புதிய ஊராட்சி மன்ற தலைவரை இறைவன் தந்த குடை என புகழ்ந்தனர்….