Social Sharing
திருச்சி மாநகரில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 3 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தகவல்.
திருச்சி மாநகரில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 3 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.
32-வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு தொடக்க நிகழ்ச்சி மாநகர போலீஸ் சார்பில் நேற்று மாலை திருச்சி எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானாஅருகில் நடந்தது. அதையொட்டி, அவ்வழியாக இருச்சக்கர வாகனத்தில் ‘ஹெல்மெட்’ அணியாமல் வந்தவர்கள் போலீசாரால் மடக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டனர்.
அதுபோல ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த சிலரையும் போலீசார் நிறுத்து வரிசையாக நிற்க வைத்தனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:திருச்சியில் 65 சதவீதம் பேர் ‘ஹெல்மெட்’ அணிந்து வாகனம் ஓட்டுகின்றனர். அதனை 100 சதவீதமாக கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ஒரு மாதம் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு (2020) ‘ஹெல்மெட்’ அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டியதாக 3 லட்சம் பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’, ‘சீட் பெல்ட்’ அணிந்து வாகனம் ஓட்டி விபத்தில்லா திருச்சி மாநகரை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ‘ஹெல்மெட்’ அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு சாக்லெட் வழங்கினார். ‘ஹெல்மெட்’ அணியாதவர்களுக்கு உடனடியாக அபராதமும் விதிக்கப்பட்டு உயிரின் முக்கியத்துவம் குறித்து கமிஷனர் லோகநாதன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம், உதவி கமிஷனர்கள் முருகேசன் (போக்குவரத்து) , மணிகண்டன், ரவி அபிராம் (சட்டம்-ஒழுங்கு) இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், திருநாவுக்கரசு, விக்டர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி தெற்கு மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று காலை ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஷாஹுல் ஹமீது