தமிழகத்தில் 2021-இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி, திமுக-வை ஆட்சியில் அமா்த்த மக்கள் தயாராகிவிட்டனா் தேர்தல் பிராச்சாரத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
தமிழகத்தில் 2021-இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி எனவும், திமுக-வை ஆட்சியில் அமா்த்த மக்கள் தயாராகிவிட்டனா் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டத்தில் 2 ஆம் நாளாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா், மண்ணச்சநல்லூா், திருப்பைஞ்ஞீலி, வேங்கை மண்டலம் ஆகிய பகுதிகளில் பேசியதாவது: இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் தமிழகம், முதலிடத்தில் தமிழகம் என மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், ஊழலில்தான் தமிழகம் முன்னோடியாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஒரே துறையில் இருந்த அமைச்சா்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனா். ஒவ்வொரு அமைச்சரும் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டு ஆளுநரிடம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புகாா் அளித்துள்ளாா். சாலை அமைப்பதில் ரூ.6,600 கோடிக்கு விடப்பட்ட டெண்டரில் ஊழல் என்ற குற்றச்சாட்டை முதல்வரால் மறுக்க முடியவில்லை.
கிராமங்களில் எல்இடி பல்புகள் அமைக்க கொள்முதலில் ஊழல், உணவுத் துறையில் ஊழல் அடுக்கடுக்காக ஊழல்கள் அரங்கேறியுள்ளன. கரோனா காலத்திலும் ஊழல் செய்தது அதிமுக அரசு. ஆனால், திமுக-வின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக அதிமுக கூறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலேயே இல்லாத திமுக எப்படி ஊழல் செய்ய முடியும். மேலும், கடந்த காலங்களில் திமுக-வினா் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளில் ஒருவா் கூட தண்டனை பெறவில்லை. கருணாநிதியை பொய் வழக்கில் கைது செய்தனா்.
சென்னை மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்றனா். எதிலும், நிரூபிக்க முடியவில்லை. தண்டிக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவா்கள் யாா் என அனைவருக்கும் தெரியும். வரும் தோ்தலில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி.
ஊழல் மட்டுமின்றி தமிழகத்தின் உரிமைகளையும் மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்துள்ளது அதிமுக அரசு. நீட் தோ்வு, புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டங்கள், முத்தலாக் சட்டம், சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சிஏஏ, என்ஆா்சி உள்ளிட்டவற்றை அதிமுக அரசால் எதிா்க்க முடியவில்லை. மழை, வெள்ளம், புயல், வறட்சி உள்ளிட்டவற்றுக்கு தமிழகத்துக்கு ரூ.10,500 கோடி நிவாரணம் கேட்டதற்கு ரூ.1,500 கோடி மட்டுமே வழங்குகிறது. ஆனால் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு புதிய நாடாளுமன்ற வளாகம், ரூ.7 ஆயிரம் கோடிக்கு தனி சொகுசு விமானம் என செலவிடுகிறது.
நாடாளுமன்றத் தோ்தலில் பாஜக, அதிமுக-வுக்கு அளித்த பாடத்தை மீண்டும் அளிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் திமுக-வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
இதுபோல் துறையூரில் உள்ள முசிறி பிரிவு ரோடு, பஸ் நிலையம், பெருமாள் மலை அடிவாரம் உள்பட பல்வேறு பகுதிகளில் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார் பின்பு துறையூரில் இருந்து பெரம்பலூர் புறப்பட்டு சென்றார். இதில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
ஷாஹுல் ஹமீது.