Social Sharing
தங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சாட்டி தொல்லியல் துறை, பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் நடைபாதை வியாபாரிகள் தொழிற்சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மாமல்லபுரம்: தங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சாட்டி தொல்லியல் துறை, பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் நடைபாதை வியாபாரிகள் தொழிற்சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய புராதன சின்ன வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் கடந்த பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும், தொல்லியல் துறையும் தங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் தங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பகுஜன் சமாஜ் கட்சி நடைபாதை வியாபாரிகள் தொழிற்சங்கம் சார்பில் பேரூராட்சி மற்றும் தொல்லியல் துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டி.ஜெகன் தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் அ.முத்துகிருஷ்ணன், மாநில செயலாளர் ரா.பெரியாரன்பன், மாநில செயலாளர் டி.தமிழ்மதி, நகர நிர்வாகி மல்லை ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தொழிற்சங்க பொதுச்செயலாளர் டி.பாரதிதாசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசினார்.
நடைபாதை வியாபாரிகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்காக மத்திய அரசு 2014-ம் ஆண்டில் நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை சட்டம் இயற்றியுள்ளதாகவும், அந்தந்த மாநில அரசுகளும் இந்த சட்டத்தை பின்பற்றும் வகையில் 2015-ம் ஆண்டில் நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றி உள்ளது. அதன்படி நடைபாதை வியாபாரிகளுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும், தொல்லியல் துறையும் நடைபாதை வியாபார ஒழுங்கு முறை சட்டத்தின்படி அவர்கள் வியாபாரம் செய்ய ஒழுங்குபடுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கையாக அவர்கள் மீது அடக்குமுறையை திணிக்க கூடாது என்றும் இந்த ஆர்ப்;பாட்டத்தில் பேசியவர்கள் தொல்லியல் துறை மற்றும் பேரூராட்சியை வலிறுயுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடைபாதை வியாபாரிகள் மாமல்லபுரம் தொல்லியல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கேஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மாமல்லபுரம் நடைபாதை வியாபாரிகள் அனைவரும் நேற்று தங்கள் கடைகளை அடைத்து இருந்தனர். நடைபாதை வியாபாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மாமல்லபுரம் பாலாஜி.